பாவப்பரிகார நாள்
1.ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம்,
2. “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!
3 “ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும்.
4. ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள்.
5. “ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.
6. பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.
7. “பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும்.
8. பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது.
9. “பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும்.
10. ஆனால் போக்காடாகச் சீட்டுள்ள கடாவையும் கர்த்தருக்கு முன் கொண்டு வர வேண்டும். பின் அந்தக் கடாவை உயிரோடு வனத்துக்குத் துரத்திவிட வேண்டும். இது ஜனங்களைச் சுத்திகரிப்புச் செய்யும்.
11. “பிறகு ஆரோன் காளையைத் தனக்குரிய பாவப்பரிகார பலியாகச் செலுத்தி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனே தனக்கான பாவப்பரிகார பலியாக அக்காளையைக் கொல்ல வேண்டும்.
12. பிறகு கர்த்தரின் சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத் தணலினால் தூபகலசத்தை நிரப்ப வேண்டும். பொடியாக்கப்பட்ட நறுமணப் பொருட்களை தன் கைப்பிடி நிறைய எடுத்து திரைக்கு உட்புறமாகக் கொண்டு வர வேண்டும்.
13. அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான்.
14. ஆரோன் கொல்லப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதனை விரலால் தொட்டுக் கீழ்ப்புறமாக நின்று கிருபாசனத்தின்மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை அவன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும்.
15. “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும்.
16. இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.
17. “அவர்களுடைய தீட்டுகளின் மத்தியிலிருக்கிற மிகப் பரிசுத்தமான இடத்தில் இச்சடங்குகளையெல்லாம் ஆரோன் செய்யும்போது எவரும் ஆசரிப்புக் கூடாரத்தில் நுழையக் கூடாது. ஆரோன் வெளியே வந்த பிறகுதான் எவரும் நுழைய வேண்டும். இவ்வாறு ஆரோன் தன்னையும், தன் குடும்பத்தாரையும், இஸ்ரேவேல் ஜனங்களையும் சுத்தம் செய்கிறான்.
18. பிறகு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின் அருகில் வரவேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும்.
19. தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும்.
20. “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து
21. தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான்.
22. அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.
23. “பிறகு ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவான். பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அவன் அணிந்திருக்கும் மெல்லிய பஞ்சாடைகளை நீக்கி அவைகளை அங்கேயே வைத்துவிட வேண்டும்.
24. ஒரு பரிசுத்தமான இடத்தில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் கழுவி, பிறகு வேறு சிறப்பு ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வெளியே வந்து தனது மற்றும் ஜனங்களின் தகன பலிகளைச் செலுத்தி தன்னையும் ஜனங்களையும் பரிசுத்தமாக்க வேண்டும்.
25. பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான்.
26. “போக்காடாகிய கடாவைக் கொண்டு போய் வனாந்திரத்திலே விட்டவன் ஆடைகளைத் துவைத்துக் குளித்துவிட்டு முகாமுக்குள் வரவேண்டும்.
27. “பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும்.
28. எரித்தவன் ஆடையைத் துவைத்து தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவிய பின்னரே கூடாரத்திற்குள் நுழைய வேண்டும்.
29. “இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது.
30. ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள்.
31. இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும்.
32. “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
33. மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான்.
34. இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.
லேவியராகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27