மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள்
1. கர்த்தர் மோசேயிடம்
2. “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு:
3. ஒரு இஸ்ரவேலன் ஒரு காளையையோ, அல்லது ஒரு செம்மறியாட்டையோ அல்லது வெள்ளாட்டையோ முகாமுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கொல்லலாம்.
4. அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
5. விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும்.
6. பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.
7. தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை.
8. “ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ
9. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள்.
10. “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன்.
11. ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது.
12. உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.
13. “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும்.
14. இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான்.
15. “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும்.
16. அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.
லேவியராகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27