தொழுநோய்க்கான விதிகள்:

1. தேவனாகிய கர்த்தர் மோசேயிடம்,

2. “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர்.

3. உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர்.

4. “ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம்.

5. தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல.

6. ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.

7. சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.

8. “ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர்.

9. “ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன்.

10. ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.

11. ஆனால் ஆசாரியன் தனது சொந்தப் பணத்தின் மூலம் ஒரு அடிமையை வாங்கியிருந்தால், அந்த அடிமை பரிசுத்தமான உணவில் கொஞ்சம் உண்ணலாம். ஆசாரியன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த அடிமைகளும் ஆசாரியனின் உணவை கொஞ்சம் உண்ணலாம்.

12. ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது.

13. ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும்.

14. “ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும்.

15. “இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அந்த காணிக்கைகள் பரிசுத்தமானவை. எனவே ஆசாரியர்கள் பரிசுத்தமான அவற்றை அசுத்தமாக்கக் கூடாது.

16. ஒருவேளை ஆசாரியர்கள் அவற்றை அசுத்தமாக்கிவிட்டால் அவர்கள் பரிசுத்த உணவை உண்ணும்போது தங்கள் பாவத்தை மிகுதிப்படுத்துகிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களை பரிசுத்தமாக்குவேன்” என்று கூறினார்.

17. தேவனாகிய கர்த்தர் மோசேயிடம்,

18. “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம்.

19-20. அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.

21. “ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும்.

22. குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களை கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது.

23. “சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனை கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

24. “ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதை கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது.

25. “நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களை கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார்.

26. கர்த்தர் மேலும் மோசேயிடம்,

27. “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும்.

28. ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும்.

29. “நீ நன்றி தெரிவிப்பதற்காக கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும்.

30. ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர்.

31. “எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர்.

32. எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன்.

33. நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

லேவியராகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

(Visited 4 times, 1 visits today)