தேசத்திற்கு ஓய்வுக் காலம்

1.சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம்,

2. “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை அந்நாடு கொண்டிருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற ஓய்வுக்காலம் ஆகும்.

3. ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள்.

4. ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள்.

5. அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும்.

6. “நிலம் ஒரு வருடம் ஓய்வாக விடப்பட்டாலும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்களுக்கும், உங்கள் ஆண், பெண், வேலையாட்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள கூலி வேலைக்காரர்களுக்கும், அயல்நாட்டுக்காரர்களுக்கும்கூட போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும்.

7. உங்கள் பசுக்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும்கூட போதுமான உணவு இருக்கும்.

யூபிலி-விடுதலையின் ஆண்டு

8. “மேலும் நீங்கள் ஏழு ஓய்வு ஆண்டுகள் கொண்ட ஏழு ஓய்வு ஆண்டுகளை எண்ணுங்கள். அது மொத்தம் 49 ஆண்டுகளாகும். அந்த 49 வருடங்களில் மொத்தத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பூமிக்கு ஓய்வு கிடைக்கும்.

9. பாவப்பரிகார நாளில் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளத்தை ஊதவேண்டும். அது ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளாக இருக்கும். நாடு முழுவதும் எக்காளம் ஊதிக் கொண்டாட வேண்டும்.

10. நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள்.

11. உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள்.

12. அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள்.

13. யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும்.

14. “உனது அயலானிடம் நிலம் விற்கும்போது ஏமாற்றாதே. அதுபோல் நீ நிலம் வாங்கும்போது அவன் உன்னை ஏமாற்றும்படி விடாதே.

15. நீ அயலானின் நிலத்தை வாங்கும்போது அந்த நிலத்தின் யூபிலியைக் கணக்கிட்டு அதற்கேற்ற விலையை நிர்ணயித்துக்கொள். நிலத்தை விற்கும்போதும் அதனுடைய அறுவடைகளைக் கணக்கிட்டு அதன் மூலம் சரியான விலையை நிர்ணயித்துக்கொள். ஏனென்றால் அடுத்த யூபிலிவரை அறுவடை செய்யும் உரிமையை மட்டுமே விற்கிறான்.

16. யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும்.

17. ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்!

18. “எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம்.

19. நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம்.

20. “ஆனால் நீங்கள் ‘நான் விளைய வைத்துப் பொருட்களைச் சேர்த்து வைக்காவிட்டால் ஏழாவது ஆண்டில் வசதியாக உண்ண முடியாது’ என்று சொல்லலாம்.

21. கவலைப்படாதிருங்கள்! ஆறாவது ஆண்டில் என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி கட்டளையிடுவேன். தொடர்ந்து நிலம் மூன்று ஆண்டுகளுக்கு நன்கு விளையும்.

22. நீ எட்டாவது ஆண்டில் பயிர் செய்யும்போதும் பழைய விளைச்சலையே உண்டுகொண்டிருப்பாய். ஒன்பதாவது ஆண்டில் புதிய விளைச்சல் கிடைக்கும்வரை இவ்வாறு செய்வாய்.

சொத்துக்குரிய சட்டங்கள்

23. “இந்த நிலம் உண்மையில் எனக்குரியது. எனவே இதனை நீங்கள் நிரந்தரமாக விற்கமுடியாது. அந்நியர்களாகவும் பயணிகளாகவுமே என் நிலத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு வாழ்கிறீர்கள்.

24. ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம். எனினும் அது அவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் வந்து சேரும்.

25. உங்களில் ஒருவன் மிகவும் வறியவனாகவோ, தன் சொத்துக்களை விற்கும் அளவுக்கு ஏழையாகவோ மாறலாம். அப்போது அவனுக்கு நெருக்கமான உறவினரில் எவராவது வந்து அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும்.

26. அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம்.

27. பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும்.

28. ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும்.

29. “ஒருவன், மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வீட்டை விற்றால் ஒரு ஆண்டு வரை மட்டுமே அவனுக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிற உரிமை உண்டு.

30. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரன் அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அது வாங்கியவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும் உரிமையாகிவிடும். வீடு யூபிலி ஆண்டில் நிலத்தைப் போன்று அதன் சொந்தக்காரனுக்குப் போய்ச் சேர்வதில்லை.

31. மதில் இல்லாத பட்டணங்களாக இருந்தால் அது வயல் வெளியாக எண்ணப்படும். அதில் உள்ள வீடுகள் மட்டுமே யூபிலி ஆண்டின்போது உண்மையான சொந்தக்காரனுக்கு சேரும்.

32. “ஆனால் லேவியரின் நகரம்பற்றி வேறு விதிகள் உள்ளன. லேவியர்கள் நகரங்களில் தங்கள் வீடுகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வாங்கிக்கொள்ளலாம்.

33. லேவியர்களிடமிருந்து யாரவது ஒரு வீடு வாங்கினால் லேவியரின் நகரங்களிலுள்ள வீடுகளெல்லாம் யூபிலி ஆண்டில் மீண்டும் அவர்களுக்கே உரியதாகிவிடும். ஏனென்றால் லேவியரின் நகரங்கள் எல்லாம் லேவியின் கோத்திரங்களுக்கு சொந்தம். இஸ்ரவேல் ஜனங்கள் இதனை லேவியர்களுக்குக் கொடுத்துவிட்டனர்.

34. அதோடு லேவியரின் நகரங்களைச் சுற்றியிருக்கிற வெளி நிலங்களை விற்கமுடியாது. அது எப்போதும் லேவியர்களுக்கே உரியதாகும்.

அடிமைகளின் எஜமானர்களுக்கு உரிய விதிகள்

35. “உன் சகோதரரில் ஒருவன் மிகவும் வறுமையனாகிவிட்டால் அவன் அயல் நாட்டுக்காரனைப் போன்று உன்னோடு பிழைக்கும்படி அனுமதிக்க வேண்டும்.

36. நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக.

37. அவனிடம் நீ கொடுத்த கடனுக்காக வட்டி வாங்காதே. நீ விற்கிற உணவிற்கு மிகுதியாக லாபம் வரும்படி செய்யாதே.

38. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன்.

39. “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது.

40. யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான்.

41. பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான்.

42. ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது.

43. இவர்களுக்குக் கொடூரமான எஜமானனாக நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் தேவனுக்கு பயப்பட வேண்டும்.

44. “உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம்.

45. உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள்.

46. உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.

47. “அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல்வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம்.

48. அவன் திரும்பவும் சுதந்திரமானவனாக முடியும். அவனது சகோதரரில் ஒருவன் அவனை விலை கொடுத்து மீட்டுவிடலாம்.

49. அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம்.

50. “அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான்.

51. யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும்.

52. யூபிலி ஆண்டு வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகளே இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை குறைவாக இருக்கும்.

53. ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.

54. “அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள்.

55. ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் எனது ஊழியர்கள். நான் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!

லேவியராகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

(Visited 9 times, 1 visits today)