வனாந்தரத்தில் ஊற்று

இங்கிலாந்தை சேர்ந்த சாமுவேல் பிளிம்சோல் (Samuel Plimsoll) என்பவரின் முயற்சியால் கடலில் செல்லும் வியாபார கப்பல்களுக்கு ஒரு வரைமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வியாபார கப்பல்களும் எந்த அளவு எடைகளை கொண்டு செல்லலாம் என்பது நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் நீண்ட தூரம் செல்லும் கப்பல்கள் பிரச்சனைகள் இல்லாமல் பயணம் செய்வதற்கு அந்த முறை உதவியது. இந்நாள் வரை கரைதட்டி நிற்கும் வியாபாரக் கப்பல்களில் பிளிம்சோல் லைன் என்று சொல்லப்படும் அந்த குறிகளை தண்ணீரின் மட்டத்திற்கு மேல் காணலாம்.

தேவனின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளிம்சோல் லைன் உண்டு. அதற்கு மேல் அவர் ஒருபோதும் நம் மேல் பாரத்தை ஏற்ற மாட்டார். ஒரு தகப்பனும் ஒரு மகனும் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். தகப்பன் என்னென்ன தேவையோ அதையெல்லாம் தன் மகனுடைய கையில் இருந்த கூடையில் வைத்தார். அதை கண்ட ஒரு பெண்மணி, ’ஐயோ, இந்த சிறுவனிடம் எத்தனை எடையை தகப்பன் தூக்க வைக்கிறார்’ என்று பரிதாபப்பட்டாள். அப்போது, அந்த மகன், ’நீஙகள் கவலைப்படாதீர்கள், என் தகப்பனுக்கு தெரியும் எத்தனை கிலோ எடையை நான் தாங்குவேன் என்று’ என்று கூறினான்.

இன்று நமக்கு வரும் பிரச்சனைகளை குறித்து, நாம், ’என்னால் தாங்க முடியாத பாரமாயிருக்கிறதே, கடவுள் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறாரா’ என்று நினைக்கலாம். கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்’ என்று சொல்கிறது. அவர் நிச்சயமாக நம்முடைய திராணிக்கு மேலாக நம்மை சோதிக்கவே மாட்டார். மட்டுமல்ல, வரும் சோதனையிலிருந்து தப்பித்து கொள்ளத்தக்கதான வழியையும் நமக்கு காட்டுவார்.

மனம் சோர்ந்து போகாதிருங்கள். உங்களை தம்முடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறவர், நீங்கள் துன்பங்களினாலும் பாடுகளினாலும் பாடுபடும்போது பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார். அன்று ஆகார் தனிமையாய், வனாந்தரத்திலே தன் மகன் சாவதை பார்க்க மாட்டேன் என்று தூரத்திலே போய் அழுது கொண்டு இருந்தபோது அவளுடைய கண்ணீரை கண்ட தேவன், அந்த வனாந்தரத்திலும் தண்ணீர் ஊற்றை திறந்து அந்த பிள்ளையின் சத்தத்தை கேட்டு, ஆகாரின் கண்ணீருக்கு பதில் கொடுத்த தேவன். – (ஆதியாகமம் 21:16-19) இன்றும் மாறாதவராயிருக்கிறார்.

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசாயா 43:19) என்று நமக்காக செய்ய முடியாத காரியங்களை செய்கிற தேவன் நம் தேவனல்லவோ! அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், இன்றும் நம் கண்ணீரை காண்கிறவராகவே இருக்கிறார். நம்முடைய பிரச்சனைகளுக்கு நிச்சயமாகவே முடிவு கொண்டு வருவார். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18) என்று சொனனவர் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவை சீக்கிரத்தில் கொண்டு வருவார். மனம் கலங்காதிருங்கள். நமக்காக பரிந்து பேசும் தேவன் ஒருவர் உண்டு, நமக்காக யுத்தம் செய்யும் தேவன் ஒருவர் உண்டு. நம்மை விசாரிக்கும் தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்

(1 கொரிந்தியர் 10:13)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 5 times, 1 visits today)