வழுவாத விசுவாசம்

சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பில்லி கிரஹாம் என்றவுடன் உங்களுக்கு அநேகமாக தெரிநதிருக்கும், இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் பில்லி கிரஹாமும், சார்லசும் இளவயது நண்பர்கள். 1945ல் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ வாலிபர் கூட்டத்தில் நண்பர்கள் ஆனார்கள். பின் இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் பிரயாணம் செய்து சுவிசேஷ கூட்டங்கள் நடத்தினர். பின் நாட்களில் இந்த சார்லஸ் 1200 பேர் கொண்ட ஒரு சபையை தனி மனிதனாக உருவாக்கினார். அந்நாட்களில் அநேகர் பில்லி கிரஹாமை விட சார்லஸ்தான் மிக வல்லமையான ஊழியராக வருவார் என கருதினார்கள்.

இப்படி வல்லமையாக ஊழியம் செய்த சார்லஸ் வாழ்வில் திடீரென ஓர் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணம் வாழ்க்கை என்ற மாதப்பத்திரிக்கையே ஆகும். அதில் வட ஆப்ரிக்காவில் நிலவிவரும் கடும் பஞ்சத்தை குறித்த புகைப்பட செய்தி வெளியாயிருந்தது. அதில் ஒரு நீக்ரோ பெண்மணி பஞ்சத்தால் இறந்த ஒரு குழந்தையை கையில் வைத்தவாறு வானத்தை அண்ணாந்து பார்ப்பது போல படமிருந்தது, இந்த படத்தை பார்த்த சாலஸ்க்கு ஒரு சந்தேகம் எழும்பலாயிற்று.

அன்பு நிறைந்த தெய்வம் இந்த உலகில் இருந்தால் மழை இல்லாமல் இந்த குழந்தை இறக்க நேரிடுமா? இந்த தாயின் வேதனையை அவர் அறிந்திருந்தாரானால் நிச்சயம் இது நடக்காது என்ற சிந்தனை உருவானது. அவரது வலுவான விசுவாசம் மிகுந்த ஆட்டம் கண்டது. அநேக கேள்விகளால் குழப்பப்பட்டு விசுவாசத்தை முற்றிலும் இழந்து ஊழியத்தை விட்டு விலகலானார். அதோடு பில்லி கிரஹாமையும் தேவனை நம்புவது மடத்தனம் என்றார். ஆனால் அவரோ கேள்வி அநேகம் இருந்தாலும், தன் விசுவாசத்தை காத்து கொணடு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்தார். சார்லஸோ தீவிர நாஸ்திகவாதியாகி, அதன் கொள்கையை தனது நாவல்களிலும் புத்தகங்களிலும எழுத ஆரம்பித்தார்.

வேதத்திலே யோவான்ஸ்நானகன் இயேசுகிறிஸ்துவை இவ்வுலகிற்கு காட்டுவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. இயேசுகிறிஸ்துவை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என இஸ்ரவேலருக்கு ஆணித்தரமாக அறிவித்தார். ஆனால் பின்நாட்களில் ஏரோது ராஜாவினால் சிறையில் அடைக்கப்பட்டபோது, இயேசுகிறிஸ்துவால் அற்புதங்கள் எதுவும் நடந்து, தான் விடுவிக்கப்படாததால் வரப்போகிற மேசியா நீர் தானா என்று இயேசுவிடம் கேட்டனுப்பினார். அப்போது இயேசுகிறிஸ்து ‘என்னிமித்தம் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்’ என்றார்.

பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் திறனிலும், ஒரு காரியத்தை ஆராய்வதிலும் வித்தியாசமுண்டு, ஆகவே பிசாசானவன் நம்மை வீழ்த்த பலவகையான வழிமுறைகளை கையாளுகிறான். சிலரை பாவத்திலும், சிலரை குழப்பமான தத்துவங்களினாலும், சந்தேகங்களினாலும் விசுவாசத்தினின்று விழப்பண்ணுகிறான். பிசாசின் தந்திரங்களுக்கு ஜாக்கிரதையாய் நம்மை காத்துக கொள்ள வேண்டும். விசுவாசத்தையும் சத்தியத்தையும் பற்றிய சந்தேகங்கள் நமக்கு வரும்போது, பொறுமையாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்க வேண்டும்.

ஆண்டவர் நமது விசுவாசம் வழுவாதபடி போதித்து நடத்துவார். வேத வசனத்திற்கு முதலிடம் கொடுத்து, இரவும் பகலும் ஆசையாய் தியானம் பண்ணும்போது நாம் சார்லஸை போல வழி விலகாமல் பில்லி கிரஹாமை போல தேவனுக்கென்று எழுந்து பிரகாசிப்போம். நித்திய ஜீவனையும் சுதந்தரித்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார் (மத்தேயு 11:6)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 6 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *