ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான்

1. ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். அதனை அபிமெலேக்கு ஆண்டு வந்தான். அவன் பெலிஸ்திய ஜனங்களின் அரசன்.

2. கர்த்தர் ஈசாக்கின் முன்பு தோன்றி, “நீ எகிப்துக்குப் போக வேண்டாம். நான் எங்கே உன்னை வசிக்கச் சொல்கிறேனோ அங்கே இரு.

3. நான் உன்னோடு இருப்பேன். உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் வாரிசுகளுக்கும் இந்தப் பகுதியைத் தருவேன். உன் தந்தையான ஆபிரகாமுக்குச் செய்த வாக்கின்படி உனக்குத் தருவேன்.

4. வானத்து நட்சத்திரங்ளைப் போன்று உன் குடும்பத்தைப் பெருகச் செய்வேன். இந்த நிலப்பகுதிகளையெல்லாம் உன் குடும்பத்தாருக்கே தருவேன். உன் சந்ததிகள் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் ஆசீர்வதிப்பேன். 

5. நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் உன் தந்தை எனக்குக் கீழ்ப்படிந்து நான் சொன்னபடி நடந்தான். எனது ஆணைகள், சட்டங்கள், விதிகள் அனைத்துக்கும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான்” என்றார்.

6. ஆகவே, ஈசாக்கு கேராரிலியே தங்கினான்.

7. ஈசாக்கின் மனைவியான ரெபெக்காள் மிகவும் அழகானவள். அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் ரெபெக்காள் தன் மனைவி என்று சொல்ல அஞ்சி, “அவள் என் சகோதரி” என்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக்கொள்வார்கள் என எண்ணினான்.

8. ஈசாக்கு அங்கே நீண்ட காலம் வாழ்ந்தபோது, அபிமெலேக்கு ஒரு நாள் தன் ஜன்னல் வழியாக ஈசாக்கு ரெபெக்காளோடு விளையாடுவதைக் கவனித்தான்.

9. அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து அவனிடம், “இவள் உன் மனைவி அல்லவா, அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டான். ஈசாக்கு, “என்னைக் கொன்று இவளை அபகரித்துக்கொள்வாயோ என்று பயந்தேன்” என்றான்.

10. “நீ எங்களுக்குத் தீயதைச் செய்துவிட்டாய், ஒருவேளை எங்களில் ஒருவன் உன் மனைவியோடு பாலின உறவுகொண்டிருந்தால் பெரிய குற்றம் செய்த பாவத்துக்கு அவன் ஆளாகி இருக்கக் கூடும்” என்று அபிமெலேக்கு கூறினான்.

11. ஆகையால் அபிமெலேக்கு அனைவருக்கும் எச்சரிக்கை விடுவித்தான், “இவனையோ இவன் மனைவியையோ யாரும் துன்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்ய முயல்வோர் கொல்லப்படுவர்” என்றான்.

ஈசாக்கு செல்வந்தன் ஆகுதல்

12. ஈசாக்கு அங்கேயே நிலங்களில் விதை விதைத்தான். அவ்வாண்டு அவனுக்கு பெரும் அறுவடை கிடைத்தது. கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

13. ஈசாக்கு செல்வந்தன் ஆனான். தொடர்ந்து அவன் பெரிய செல்வந்தனாக வளர்ந்துகொண்டிருந்தான்.

14. அவனுக்கு நிறைய மந்தைகளும், அடிமைகளும் இருந்தனர். பெலிஸ்திய ஜனங்கள் அவன்மீது பொறாமை கொண்டனர்.

15. ஆகவே அவர்கள் முற் காலத்தில் ஆபிரகாமும் அவனது வேலைக்காரர்களும் தோண்டிய கிணறுகள் அனைத்தையும் மண்ணால் நிரப்பி அழித்தனர்.

16. அபிமெலேக்கு ஈசாக்கிடம், “எங்கள் நாட்டைவிட்டுப் போ. நீ எங்களைவிட பெரும் அதிகாரம் பெற்றிருக்கிறாய்” என்றான்.

17. எனவே ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் போய், கேராரில் உள்ள சிறு நதியின் கரையில் குடியேறினான்.

18. இதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே ஆபிரகாம் நிறைய கிணறுகள் தோண்டியிருந்தான். ஆபிரகாம் மரித்தபின்பு, பெலிஸ்திய ஜனங்கள் அவற்றை மண்ணால் தூர்த்துவிட்டனர். அதன் பின்பு ஈசாக்கு மீண்டும் அக்கிணறுகளைத் தோண்டினான். அவற்றிற்கு தன் தந்தை இட்ட பெயர்களையே இட்டான்.

19. ஈசாக்கின் வேலைக்காரர்களும் நதிக்கரையில் ஒரு கிணறு தோண்டினார்கள். அதிலிருந்து ஒரு பெரும் ஊற்று வந்தது.

20. ஆனால் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் வேலைக்காரர்களோடு வாக்குவாதம் செய்து தண்ணீர் தங்களுடையது என உரிமை கொண்டாடினர். அதனால் ஈசாக்கு அதற்கு ஏசேக்கு என்று பெயர் வைத்தான்.

21. பிறகு ஈசாக்கின் வேலைக்காரர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்டினர். அங்குள்ள ஜனங்கள் அது தொடர்பாகவும் வாக்குவாதம் செய்தனர். எனவே ஈசாக்கு அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.

22. ஈசாக்கு அங்கிருந்து நகர்ந்து போய் வேறொரு கிணறு தோண்டினான். எவரும் அதுபற்றி வாதிட வரவில்லை. அதனால் அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். “இப்போது கர்த்தர் நமக்கென்று ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டார். எனவே நாம் இங்கே செழித்து நாட்டில் பெருகுவோம்” என்றான்.

23. அங்கிருந்து ஈசாக்கு பெயர்செபாவுக்குப் போனான்.

24. அன்று இரவு கர்த்தர் அவனோடு பேசி, “நானே உனது தந்தை ஆபிரகாமின் தேவன், அஞ்சவேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன் குடும்பத்தை பெரிதாக்குவேன். எனது ஊழியனான ஆபிரகாமுக்காக இதனைச் செய்வேன்” என்று சொன்னார்.

25. எனவே, ஈசாக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தரை தொழுதுக்கொண்டு அங்கேயே குடியேறினான். அவனது வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினர்.

26. அபிமெலேக்கு கேராரிலிருந்து ஈசாக்கைப் பார்க்க வந்தான். அவன் தன்னோடு தன் அமைச்சரான அகுசாத்தையும் அழைத்துவந்தான். மீகோல் எனும் படைத் தளபதியும் கூட வந்தான்.

27. “என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்? இதற்கு முன் என்னை நீங்கள் வெறுத்தீர்கள். உங்கள் நாட்டை விட்டு துரத்தினீர்களே” என்று ஈசாக்கு கேட்டான்.

28.“கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம். நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.

29. நாங்கள் உன்னைத் துன்புறுத்தவில்லை. நீயும் எங்களைத் துன்புறுத்தமாட்டாய் என்று வாக்குறுதி செய். நாங்கள் உன்னைச் சமாதானத்தோடுதான் வெளியே அனுப்பினோம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது” என்றனர்.

30. அதனால் ஈசாக்கு அவர்களுக்கு விருந்து கொடுத்தான். அவர்கள் நன்றாக உண்டு, குடித்தனர்.

31. மறுநாள் அதிகாலையில் ஒருவரோடொருவர் வாக்குறுதி செய்துகொண்டபின், அவர்கள் சமாதானத்தோடு பிரிந்து போனார்கள்.

32. அன்று, ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றிக் கூறினர். “அதில் தண்ணீரைக் கண்டோம்” என்றனர்.

33. அதனால் ஈசாக்கு அதற்கு சேபா என்று பெயரிட்டான். அந்த நகரமே பெயெர்செபா என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

ஏசாவின் மனைவியர்

34. ஏசாவுக்கு 40 வயது ஆனபோது, அவன் ஏத்தியரான இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தி பெயேரியின் மகளான யூதித், இன்னொருத்தி ஏலோனுடைய மகளான பஸ்மாத். 35 இவர்களால் ஈசாக்கும் ரெபெக்காளும் பாதிக்கப்பட்டனர்.

ஆதியாகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

(Visited 2 times, 1 visits today)