பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள்

1. கர்த்தர் மோசேயை நோக்கி,

2. “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப் பெற்றுக்கொள்.

3. ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம்,

4. இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர்,

5. சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம்,

6. அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள்,

7. ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார்.

பரிசுத்தக் கூடாரம்

8. மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.

9. பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய்.

உடன்படிக்கைப் பெட்டி

10. “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.

11. பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும்.

12. பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும்.

13. பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும்.

14. பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

15. இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.

16. “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை.

17. பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய்.

18. பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய்.

19. ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை.

20. பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.

21. “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து.

22. நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.

பரிசுத்த மேசை

23. “சீத்திம் மரத்தால் ஒரு மேசையைச் செய். அது 36 அங்குல நீளமும், 18 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் உள்ளதாக இருக்க வேண்டும்.

24. மேசையைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் தங்கத் தகட்டால் அழகுபடுத்து.

25. மூன்று அங்குல அகலமான சட்டத்தை மேசையைச் சுற்றிலும் வை. சட்டத்தைப் பொன் தகட்டால் அழகுபடுத்து.

26. நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை.

27. மேசையின் மேல் சட்டத்தைச் சுற்றிலும் சுருக்கமாக வளையங்களைப் பொருத்து. இந்த வளையங்கள் மேசையைச் சுமந்து செல்லும் தண்டுகளைத் தாங்கிக்கொள்ளும்.

28. தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும்.

29. தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும்.

30. பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும்.

குத்து விளக்குத் தண்டு

31. “பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும்.

32. “அந்தக் குத்துவிளக்குத் தண்டுக்கு ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மூன்று கிளைகள் ஒரு புறமாகவும், மூன்று கிளைகள் மறு புறமாகவும் அமைய வேண்டும்.

33. ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருக்கவேண்டும். வாதுமைப் பூக்களைப் போல் மொக்குகளோடும், இதழ்களோடும் இப்பூக்களைச் செய்ய வேண்டும்.

34. மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும்.

35. குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும்.

36. பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும்.

37. பின் குத்து விளக்குத் தண்டில் ஏழு அகல்களைப் பொருத்த வேண்டும். குத்து விளக்கின் முன்னே இந்த அகல்கள் ஒளி தரும்.

38. திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.

39. குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து.

40. மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார்.

யாத்திராகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

(Visited 1 times, 1 visits today)