மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல்

1. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி,

2 “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு.

3. பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு.

4. பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை.

5. கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.

6. “பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை.

7. ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை.

8. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.

9. “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும்.

10. தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும்.

11. பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.

12. “ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு.

13. பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும்.

14. பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணிவித்துவிடு.

15. அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார்.

16. மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.

17. எனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று

18. கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான்.

19. அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.

20. மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான்.

21. பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான்.

22. பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத்தான்.

23. பிறகு கர்த்தருக்கு முன்னே மேசையின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான்.

24. பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான்.

25. அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.

26. பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான்.

27. பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான்.

28. பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.

29. பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலிபீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.

30. பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான்.

31. மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள்.

32. அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.

33. பின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான்.

கர்த்தரின் மகிமை

34. அப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது.

35. ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.

36. இந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பியபோது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

37. ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்தபோது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள்.

38. எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.

யாத்திராகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

(Visited 1 times, 1 visits today)