
இந்தக் கேள்வியை பல யுகங்களாக எண்ணற்ற மக்கள் கேட்கின்றனர். சாமுவேல் தேவனின் சத்தத்தை கேட்டார், ஆனால் ஏலியால் அறிவுறுத்தப்படும் வரை அதை அடையாளம் காணவில்லை ( 1 சாமுவேல் 3:1-10 ). கிதியோன் தேவனிடமிருந்து பிரத்தியட்சமான வெளிப்பாட்டைக் பெற்றான், மேலும் அவன் ஒருமுறை அல்ல, மூன்று முறை ஒரு அடையாளத்தைக் கேட்கும் அளவிற்கு அவன் கேள்விப்பட்டதை இன்னும் சந்தேகித்தான் (நியாயாதிபதிகள் 6:17-22 , 36-40).
Click Here To Read All Bible Question & Answers
நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்போது, அவர்தான் பேசுகிறார் என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்? முதலாவதாக, கிதியோனும் சாமுவேலும் இல்லாத ஒன்று நம்மிடம் உள்ளது. அதுதான் தேவ உந்துதலினால் அருளப்பட்ட பரிபூரணமான முழு வேதாகமம்.
“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16–17).
நம் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றியோ அல்லது முடிவெடுப்பதைப் பற்றியோ கேள்வி எழும்போது, அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையில் போதித்ததற்கு மாறாக நம்மை ஒருபோதும் நடத்தமாட்டார் ( தீத்து 1:2 ).
தேவனின் சத்தத்தைக் கேட்க நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருக்க வேண்டும். இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27 ). தேவனின் சத்தத்தைக் கேட்பவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். கர்த்தராகிய இயேசுவில் விசுவாசம் வைத்து அவருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டவர்கள்.
இந்த ஆடுகள் அவருடைய சத்தத்தைக் கேட்டு அடையாளம் காணும் ஆடுகள், ஏனென்றால் அவர்கள் அவரை மேய்ப்பராக அறிந்திருக்கிறார்கள். நாம் தேவனின் சத்தத்தை அடையாளம் காண வேண்டுமானால், நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்க வேண்டும்.
வேத வாசிப்பிலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் அதிகமான நேரத்தைச் செலவிடும்போது அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நாம் எவ்வளவு நேரம் தேவனுடனும் அவருடைய வார்த்தையுடனும் செலவிடுகிறோமோ, அவ்வளவு எளிதாக அவருடைய சத்தத்தையும், அவர் நம் வாழ்வில் வழிநடத்துவதையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள், கள்ளநோட்டுகளை அடையாளம் காண பயிற்சியளிக்கப்படுகிறார்கள். நாம் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்திருக்க வேண்டும். யாராவது தவறானதை பேசும்போது, அது தேவனுக்கடுத்தது அல்ல என்று மிகவும் தெளிவாக கண்டுகொள்ள முடியும்.
தேவன் இன்று மக்களிடம் கேட்கக்கூடிய வகையில் பேச முடியும் என்றாலும், அவர் முதன்மையாக அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் பேசுகிறார். சில நேரங்களில் தேவனின் வழிநடத்துதல் பரிசுத்த ஆவியின் மூலமாகவும், நம் மனசாட்சி மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும், மற்றவர்களின் அறிவுரைகள் மூலமாகவும் வரலாம். நாம் கேட்பதை வேதாகமத்தின் சத்தியத்துடன் ஒப்பிடுவதன் மூலம், தேவனுடைய சத்தத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.