இயேசுவின் வருகை

1. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம்.

2. ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”

3. “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான். ‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள். அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”

4. ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான்.

5. யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

6. ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான்.

7. “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன்.

8. நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான்.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்

9. கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

10. அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார்.

11. “நீர் என்னுடைய மகன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.

இயேசு சோதிக்கப்படுதல்

12. பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார்.

13. அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள்.

கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்

14. இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார்.

15. “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார்.

சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்

16. இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

17. இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார்.

18. ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.

19. இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் மகன்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

20. அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்

21. இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார்.

22. அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார்.

23. ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான்.

24. அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.

25. இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார்.

26. அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.

27. மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.

28. எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.

அநேகரைக் குணமாக்குதல்

29. இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.

30. சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர்.

31. எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.

32. அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.

33. அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர்.

34. அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.

நற்செய்தியைப் போதிப்பதற்கு ஆயத்தம்

35. மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

36. பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர்.

37. அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.

38. இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார்.

39. ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.

நோயாளியை குணமாக்குதல்

40. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.

41. அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார்.

42. உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.

43. அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்:

44. “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார்.

45. அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.

மாற்கு அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

(Visited 2 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *