நம்மை தப்புவிக்க வல்லவர்

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளை, ஒரு அமெரிக்க போர் வீரன், எப்படியோ மற்ற வீரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டான். அங்கு யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தபடியாலும், எங்கும் புகை காடாக இருந்தபடியாலும், அவன் மற்றவர்கள் இருக்கும் இடத்தையோ, அவர்களோடு தொடர்பு கொள்ளவோ முடியாமற் போயிற்று.

பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்த அவனுக்கு, பகை நாட்டை சேர்ந்த வீரர்கள் அருகில் வரும் சத்தம் கேட்டது. அவர்களில் யாரோ ஒருவன், இந்த வீரன் நடந்து சென்று கொண்டிருப்பதை கண்டு விட்டான். ஆகவே அவர்கள் அவனை தேடி வந்து கொண்டிருந்தார்கள். எங்கேயாவது ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் வேகமாய் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நிறைய சிறு சிறு குகைகள் இருப்பதை கண்டான். வேகமாக சென்று ஒரு குகைக்குள் நுழைந்தான்.

அவனுக்கு தெரிந்து விட்டது, அந்த போர் வீரர்கள் அவனை தேடி அங்கும் வந்து எப்படியாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்று. அப்போது அங்கு அவன் சத்தமில்லாமல் அமர்ந்து தேவனிடம், ‘ஆண்டவரே, என்னை சுற்றிலும் பகைஞர்கள் சூழ்ந்து இருக்கிறார்கள்.

உமக்கு சித்தமானால் என்னை விடுவித்தருளும். உம்முடைய சித்தம் எதுவாயிருந்தாலும் அதை நான் ஏற்று கொள்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், உம்மையே நான் நம்பியிருக்கிறேன்’ என்று ஜெபித்து விட்டு, அந்த இடத்தில் அப்படியே படுத்து கிடந்தான். அந்த போர்வீரர்கள் அவனை தேடி வரும் சத்தம் கேட்டது. அவன் ‘கர்த்தர் எனக்கு உதவ மாட்டார் போலிருக்கிறது, அவ்வளவு தான் நான் சாக வேண்டியதுதான்’ என்று நினைத்தவனாக, எது வந்தாலும் எதிர் கொள்ளும்படியாக அப்படியே படுத்து கிடந்தான்.

அப்போது அவன் அந்த குகையின் வாயிலை பார்த்து கொண்டிருந்தபோது, ஒரு சிலந்தி பூச்சி வந்து, அங்கு தன் வலையை கட்ட ஆரம்பித்தது. கர்த்தர் ஒரு கற்சுவரை எழுப்பி, என்னை காத்து கொள்வார் என நினைத்தேன், ஆனால், ஒரு சிலந்தியை அனுப்பியிருக்கிறாரே என்று நினைத்தவனாக அப்படியே அசையாமல் கிடந்தான்.

பகைஞர்கள், அவனை தேடி ஒவ்வொரு குகையாக பார்த்து கொண்டிருக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. இதோ இப்போது வந்து என்னை பிடித்து விடுவார்கள் என்று அவன் நினைத்து கொண்டிருந்தபோது, அந்த போர்வீரர்கள் அவனிருந்த குகையின் வாசலை நெருங்கி பார்த்தார்கள். சற்று நேரம் நின்று விட்டு, போய் விட்டார்கள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது என்று. அப்போது தான் அவனுக்கு சட்டென்று உணர்வு வந்தது.

அந்த போர்வீரர்கள் அவன் இருந்த குகைக்கு வந்த போது, சிலந்திபூச்சி கட்டியிருந்த வலையை கண்டவுடன், ‘இதற்குள் யாரும் பிரவேசித்திருக்க முடியாது, ஏனெனில் சிலந்தி வலை இருக்கிறதே’ என்று அவர்கள் அவனை கடந்து போய்விட்டார்கள். அப்போதே அவன் முழங்கால் படியிட்டு, ‘ஆண்டவரே என்னை மன்னியும், நீர் அனுப்பும்போது, சிலந்தி வலையும், பெரிய கற்சுவரை விட உறுதியானது என்று இப்போது அறிந்து கொண்டேன். என்னை காத்ததற்காக உமக்கு நன்றி’ என்று கூறினான்.

நாம் ஒரு பிரச்சனைக்குள்ளாய் கடந்து வரும்போது, நாம் ஆராதிக்கிற தேவன், நம்மை அதிசயமாய் நம்மை தப்புவிக்க வல்லவர் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நம் தேவன் அதிசயங்களின் தேவன். இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை என்று வசனம் சொல்கிறது. அது என்ன? உறக்கம், தூக்கம்? உறக்கம் என்பது ஆழ்ந்த நித்திரை, தூக்கம் என்பது கோழி தூக்கம் தூங்கி எழுந்தேன் என்று சொல்வோமே அது போன்றது.

நம்மை காக்கிற தேவன், உறங்குவதும் இல்லையாம், தூங்குவதும் இல்லையாம்! சில வேளைகளில் நாம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து, துயரப்பட்டு கொண்டு இருக்கும்போதும் அவர் உறங்காமல், நாம் படும் வேதனைகளை அறிந்த தேவனாக, நாம் அவரிடம் உதவி கேட்க மாட்டோமா என்று காத்திருக்கிற தேவனாக இருக்கிறார். அவர் நம் பக்கத்தில் நமக்கு நிழலாயிருக்கிறார்.

எத்தனை ஆறுதலான வசனம்! நம் தேவன் நம்மோடு இருக்கிறார் என்னும் சத்தியம் நமது உள்ளத்திற்குள் இருந்தால் போதும், எத்தனை பெரிய சோதனைகளையும், பிரச்சனைகளையும் நாம் எதிர் கொள்ளமுடியும். அன்று நேபுகாத்நேச்சாரின் சிலையை வணங்க மறுத்த அந்த மூன்று எபிரேய வாலிபர்களை ஏழு மடங்கு அதிகமாக எரிய வைத்த சூளையின் மத்தியில் வீசிய போது, நான்காவது ஆளாக அந்த கொடிய சூளையில் கர்த்தரே இறங்கி வந்து, அவர்கள் முடி கூட கருகாதபடி காத்தாரல்லவா? அதே கர்த்தர் இன்றும் மாறாதவராக நம்மையும் எந்த தீமையினின்றும் காத்து கொள்ள வல்லவராயிருக்கிறார். இன்று நீங்கள் அந்த விதமான அக்கினியின் மத்தியிலும், சிங்கங்களின் மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? கர்த்தர் உங்களை தப்புவிக்க வல்லவராகவே இருக்கிறார். முடிவில் உங்கள் மீது அக்கினியின் வாசனை கூட வீசாமல், அற்புதமாய் உங்களை காத்து வழிநடத்துவார்.

அப்படிப்பட்ட அற்புத தேவனை ஆராதிக்கிற நாம், எதை குறித்தும் பயப்படாமல், அவர் மேல் சார்ந்து ஜீவிக்கும்போது, அவர் நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார். நம் ஆத்துமாவையும் கொடிய பாதாளத்திற்கு விலக்கி காப்பார். ஆமென் அல்லேலூயா!

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

(சங்கீதம் 121:4-7)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 3 times, 1 visits today)