பேதைகளை ஞானியாக்கும் வேதம்

செடி கொடிகளும் பூக்களும் நிறைந்திருந்த அழகிய தோட்டம் ஒன்றில் சிறிது நேரம் செலவழித்த ஒருவர் தன் கருத்தை கவர்ந்த மூன்று காட்சிகளை பின்வருமாறு வர்ணிக்கிறார். அவர் கண்களில் பட்ட முதலாவது காட்சி ஆங்காங்கே மலர்ந்திருந்த கவர்ச்சிகரமான பூக்களின் மேல் ஒரு வண்ணத்து பூச்சி ஓரிரு நொடி பொழுதுகள் அமர்ந்து விட்டு சென்றதாகும். அது பல வண்ண நிறங்களுள்ள அம் மலர்களின் மீது வெறுமனே அமர்ந்து விட்டு சென்று விட்டதேயன்றி, அம்மலர்களிலிருந்து ஒன்றையுமே பெற்று கொள்ளவில்லை.

அவர் கண்ட இரண்டாம் காட்சி, ஒரு தாவரவியல் நிபுணர் ஒரு பெரிய நோட்டு புத்தகத்துடனும், பூத கண்ணாடியுடனும் அங்கு வந்து, ஒவ்வொரு மலரிடத்திலும் சற்று நேரம் செலவழித்து, ஒவ்வொரு மலரை பற்றியும் ஏராளமான குறிப்புகளை அப்புத்தகத்தில் எழுதினதாகும். அவர் அவைகளை எழுதி முடித்த பின்னரோ, அவருடைய ஞானமெல்லாம் அந்த நோட்டு புத்தகத்தில் அவர் எழுதினதோடு கூட முடிந்து விட்டது போல் இருந்தது.

மூன்றாவதாக அவரது கருத்தை கவர்ந்த காட்சி, சுறுசுறுப்புள்ள ஒரு தேனீ அங்குமிங்கும் மலர்ந்திருந்த பூக்களை நாடி சென்று. அவை ஒவ்வொன்றின் மீது சற்று அதிக நேரம் அமர்ந்திருந்ததாகும். அது ஒவ்வொரு மலரையும் விட்டு வெளியே வரும்போது, அதிலிருந்து அதிகமான தேனை உறிஞ்சி எடுத்திருந்தது. அது வெறுமையாய் சென்று நிறைவாக திரும்பி வந்தது.

ஆம், மூன்று காட்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தை நாம் வாசிக்க கூடிய மூன்று விதங்களோடு நாம் ஒப்பிடலாம். ஒரு சிலர் வண்ணத்து பூச்சியை போல ஆங்காங்கே தங்களுக்கு விருப்பமான வேத பகுதிகளை மட்டும் மேலோட்டமாக வாசித்து விட்டு செல்கின்றனர். அதிலிருந்து அவர்கள் யாதொரு நன்மையையும் பெற்று கொள்வதில்லை. வேறு சிலர் தாவரவியல் நிபுணர் போல, வேதாகமத்தை கருத்தாய் வாசித்து குறிப்புகளை எழுதுகின்றனர்.

ஆனால் அவைகளின் முடிவில் அவ்வேத வசனங்களை பற்றிய சரியான விளக்கத்தையும், அதில் மறைந்து கிடக்கும் ஆழமான இரகசியங்களையும், அதிசயங்களையும் அவர்கள் விளங்கி கொள்கிறதில்லை. மற்றும் சிலரோ, வேத வசனங்களை கருத்தாய் வாசிப்போதடல்லாமல், அவற்றை தியானித்து, வேதாகமத்தில் உள்ள விலையேறப்பெற்ற தேவ வார்த்தைகள், உபதேசங்கள் வாக்குதத்தங்கள் என எல்லாவற்றையும் இனியதாய் தங்களுக்கே உரித்தாக்கி கொள்ளுகின்றனர். இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கவும் படுகிறார்கள்.

பிரியமானவர்களே, உங்கள் கையில் அரிய பொக்கிஷமாய் கிடைக்கப்பெற்றுள்ள பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்? படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கிறீர்களா? பிறர் கண்களுக்கு பக்திகுரியவர்களாக காண்பிக்கும் பொருட்டு, எல்லா பிரசங்கத்தையும் நோட்ஸ் எடுத்து வைத்து கொள்ளுகிறீர்களா? சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை (நீதிமொழிகள் 12:27) என்று வேதம் சொல்கிறது.

கொடுக்கப்படும் செய்திகளை நோட்ஸ் எடுத்து வைப்பதோடு சரி, பின்னால் அதை படிப்பதேயில்லை! ஆனால்; நாம் ஆர்வமாய் வேதத்தை தியானிக்கும்போது, பொல்லாங்கனை ஜெயிக்கலாம், நமது வழியை சுத்தம் பண்ணி கொள்ளலாம், நித்திய ஜீவனையும் சுதந்தரித்து கொள்ளலாம். ஆகையால் வேத வசனங்களை அரைகுறையான மனதோடு அல்ல, முழுமனதோடு தியானிப்போம், பேதைகளை ஞானியாக்குகிற கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொண்டு, ஞானமாய் ஜீவிப்போம். ஆமென் அல்லேலூயா!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.  (2 கொரிந்தியர் 5:17)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *