கோதுமை மணி

போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்படடு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் என்னும் புத்தகத்தை வைத்து, அநேக மூடநம்பிக்கைகளுக்குள் நடத்தி இருக்கிறீர்.

இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும். மறுதலித்தால் நீரும் உம்முடைய குடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர்.

அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் சாவதை விரும்பவில்லை’ என்று கதற ஆரம்பித்தனர். அதை கேட்ட தகப்பனின் இருதயம் கரைந்தது. தன் இரு கைகளையும் தூக்கி, ‘நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையை .. என்று ஆரம்பித்தபோது, பக்கத்திலிருந்த அவரது மனைவி, ‘அப்பா, நீங்கள் கர்த்தரை மறுதலிக்காதீர்கள்!’ என்று கூறிவிட்டு, பிள்ளைகளிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இன்று இரவு நாம் அனைவரும் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் விருந்து சாப்பிடப் போகிறோம்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்கள். பின், ‘In the sweet by and by’ என்னும் பாடலை பாட ஆரம்பித்தார்கள்.

போதகரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து பாட, கம்யூனிசவாதிகள் அவர்கள் மேல் மண்ணை போட ஆரம்பித்தார்கள். மண் அவர்களுடைய கழுத்தளவு வரும்வரை அவர்கள் பாடினார்கள். அப்படியே அவர்கள் குடும்பமாக மறுமைக்கு கடந்து சென்றார்கள். அந்நேரத்தில் தேவன் அவர்களை விடுவிக்கவில்லை. ஆனால், அதை பார்த்து கொண்டிருந்த அத்தனை பேரும் அவர்கள் முகத்திலிருந்த ஒளியை கண்டு கிறிஸ்தவர்களாக மாறினர்.

‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் (யோவான் 12:24:25) என்று இயேசுகிறிஸ்து கூறினார். கோதுமை மணியாகிய ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், தங்கள் சுயத்திற்க்கு செத்தால், மிகுந்த பலனை கொடுப்பார்கள்.

சாகாவிட்டால் கோதுமை மணி தனியே இருப்பதுபோல்தான் எந்த பிரயோஜனமுமில்லாமல் இருப்பார்கள். தன் ஜீவனை சிநேகிகக்கிறவன் அதை இழந்து போவான், ஆனால் கர்த்தருக்கென்று வாழ்கிறவனோ, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருப்பான். சிலர் அடிக்கடி சொல்வார்கள், ‘நான் இரத்தசாட்சியாய் மரிக்க போகிறேன்’ என்று. முதலில் கிறிஸ்துவுக்கென்று வாழ்ந்து காட்டுங்கள், பின்னர் மரிப்பதை குறித்து யோசிக்கலாம். இந்நாட்களில் இந்தியாவில் அனேக மிஷனெரிகளும், ஊழியர்களும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அநேக உபத்திரவங்களுக்கு ஊடாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கோதுமை மணிகளாக, நமது தேசத்திற்கென்று விதைக்கப்படுகிறார்கள். அது ஏற்ற நேரத்தில் முளைத்தெழும்பி, மிகுந்த பலனாக அநேகரை இரட்சிப்பிற்குள் நடத்த போகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு போதகரோ அல்லது ஊழியரோ தாக்கப்படும்போது அல்லது, கிறிஸ்துவுக்காக உயிரை இழக்க நேரிடும்போது நமது தேசம் சீக்கிரமாய் கிறிஸ்துவை அறிந்து கொள்ள போகிறது என்றே அர்த்தம். அந்த மாதிரி மிகுந்த உபத்திரவத்திறகுள் கடந்த செல்லும் ஒவ்வொரு ஊழியர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. (சங்கீதம் 116:15) என்று வேதம் சொல்கிறது. புதிய ஏறப்பாட்டின் முதல் இரத்தசாட்சியான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டபோது, பரலோகத்தில் இயேசுவானவர் நின்று தன்னை வரவேற்பதை கண்டான் (அப்போஸ்தலர் 7:55). அது மட்டுமல்ல, அவன் கோதுமை மணியாய் தன்னை அர்பணித்ததால், அப்போஸ்தனாகிய பவுல் தேவ தரிசனத்தை கண்டு இரட்சிக்கப்பட்டார்.

இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் பரிசுத்த யோவானை தவிர மற்ற பதினொருவரும் இரத்தசாட்களாகவே மரித்தனர். அப்போஸ்தலனாகிய பவுலும்கூட இரத்தசாட்சியாகவே மரித்தார். அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்ததால், இன்று உலக முழுவதும் எத்தனை தடைகளையும் மீறி கிறிஸ்தவம் பரவி கொண்டிருக்கிறது.

இதுவரை இரத்தசாட்சிகளாக மரித்த ஒவ்வொரு பரிசுத்தவான்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்போம். அவர்கள் மூலம் நம் தேசமும், தேவனை அறியாதபடியால் கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் மற்ற தேசங்களும் சீக்கிரமாய் இரட்சிப்படைய போவதறகாக தேவனை ஸ்தோத்தரிப்போம்.

துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்  (நீதிமொழிகள் 14:32)

 

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 32 times, 1 visits today)