சவுல் மரித்த காரணம்

இஸ்ரவேலின் முதல் இராஜா என்னும் பெருமையை பெற்ற சவுல், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சவுல், சவுந்தரியமான வாலிபனாகிய சவுல், இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் என்று சொல்லத்தக்கதான சவுல், தேவ வார்த்தைகளின்படி செய்தததினிமித்தம் மரித்து போனான். ‘அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்’ (1 நாளாகமம் 10:14) என்று வேதத்தில் பார்க்கிறோம். எத்தனை ஒரு பயங்கரமான நிலைமை!

சவுல் மரித்து போனான், நாம் நம்முடைய வாழ்க்கையை ஜாக்கிரதையாய் காத்து கொள்ளும்படியாக, சவுலின் வாழ்க்கையிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு. சவுல் போரில் மரித்து போனான் என்று வேதத்தில் எழுதப்படவில்லை, ஒருவேளை அவன் போரின் போது மரித்திருந்தாலும், அவன் மரித்தற்கான காரணங்களாக, மேற்கூறிய வசனத்தில் காணப்படுகிறது. இவைகளை நாம் கருத்தில் கொள்ளாமற் போனால், நாம் மரித்ததற்கான காரணம் இதை போல எழுதப்படலாம்.

அவன் கர்த்தருக்கு துரோகம் செய்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது. சவுலின் வாழ்வை பார்க்கும்போது, சில நேரங்களில் அவன் யுத்தம் செய்து, தன்னுடைய பராக்கிரமத்தை காட்டினாலும், தேவனை அவன் முழு இருதயத்தோடும் நாடவில்லை. அவன் தேவனை குறித்து அறிந்திருந்தான், ஆனால், அவனுடைய இருதயம் தேவனோடு தனிப்பட்ட உறவில் நிலைத்திருக்கவில்லை. ‘அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்’ (1சாமுவேல் 9:21).

அப்படிப்பட்ட சிறிதும் அற்பமுமான குடும்பத்திலிருந்து, இராஜாவாக ஏற்படுத்தப்பட்ட சவுல் தன்னுடைய நன்றியுணர்வை தேவனுக்கு வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை நாமும்கூட மிகவும் தாழ்மை நிலையில் இருந்தபோது, தேவன் நம்மையும் நினைத்து, நம்மை இந்த நாளில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கலாம். அப்படி நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்து உயர்த்தின கர்த்தரை நாம் நன்றியோடு நினைத்து, துதிக்கிறோமா? அவருக்கு நாம் உண்மையாய் இருக்கிறோமா? சவுல் தன்னை உயர்த்தின தேவனை மறந்தான், அதனால், அவன் மேல் சாபம் வந்தது.

தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனான். ‘சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்’ (1 சாமுவேல் 15:2-3) என்று தேவன் சாமுவேல் மூலம் அவனிடம் சொல்லியிருக்க, அவன் என்ன செய்தான் பாருங்கள், ‘அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.

சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்’ (1சாமுவேல் 8-9).

அப்போது தேவனுடைய வார்த்தைக்கு அவன் கொடுத்த மதிப்பு என்ன? தேவனுடைய வார்த்தைக்கு அவன் கீழ்ப்படியாமற்போனான். இன்னுமொரு இடத்தில், தேவனைவிட மக்களை அவன் பிரியப்படுத்த விரும்பி, தான் செய்யக்கூடாத பலி செலுத்துதலை செய்தான். செய்துவிட்டு, அதை சரி என்று நிரூபிக்கவும் முயற்சித்தான். ‘அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்’ (1சாமுவேல் 15:22) என்று கூறுகிறார்.

நாமும்கூட கர்த்தர் நமக்கு சொல்லும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் இன்னும் நாம் செய்ய தகாததான காரியங்களை செய்து, அதற்கு காரணத்தையும் காட்டி கொண்டு இருக்கிறோமா? கர்த்தருடைய சமுகத்தில் அது தவறானதாக காண்ப்படுமே! நாம் செய்கிற, கொடுக்கிற பலிகளை பார்க்கிலும், கீழ்ப்படிதலையே தேவன் விரும்புகிறார்.

தேவன் அருவருக்கிற குறிகேட்கும் காரியத்தை சவுல் துணிந்து செய்கிறான். ‘மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்’ – (உபாகமம் 16:11-12) என்ற கர்த்தருடைய வார்த்தைகளை அவன் நன்கு அறிந்திருந்தும், துணிந்து போய் அஞ்சனம் சொல்லுகிற ஸ்திரீயினிடம் சென்று, செத்தவர்களிடத்தில் குறிகேட்க வைக்கிறான்.

உண்மையில், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, ‘சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்றாள்’ (1சாமுவேல் 28:8) என்று அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயே சவுலிடம் கூறினதை காண்கிறோம்.

அப்படி அவர்களை தேசத்தில் இராதபடிக்கு துரத்திவிட்ட சவுல், தன்னுடைய கீழ்ப்படியாமையினிமித்தம், தேவனிடமிருந்து பதில் வராததால், அவர்களை நாடுகிறான். தேவன் அருவருக்கிற காரியத்தை துணிந்து செய்தான். கர்த்தர் அருவருக்கிற குறிசொல்லுகிறவர்களிடம் போய் நம்முடைய காரியங்களை கேட்கிறதும், செத்தவர்களிடத்தில் குறிகேட்பதும் கர்த்தருக்கு அருவருப்பானவை. அது நிச்சயமாய் சாபத்தை கொண்டு வரும். அதை செய்யாதபடி நம்மை காத்து கொள்ள வேண்டும்.

சவுல் தான் நாட்டிய பட்டயத்தில் விழுந்து, மரித்து போனாலும் கர்த்தருடைய வார்த்தை ‘அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்’ என்று இதுவே அவன் மரித்ததற்கான காரணம் என்று நமக்கு சொல்கிற எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு, அதன்படி நாம் செய்யாமல், கர்த்தருடைய வேதத்தின்படி கர்த்தர் நமக்கு சொல்லுகிறபடி செய்து, நம்மை காத்து கொள்வோமாக!

‘அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்’ 

(1 நாளாகமம் 10:13)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 5 times, 2 visits today)