பாவ அறிக்கை

1983-ம் ஆண்டு, கார்லா டக்கர் (Karla Tucker) என்னும் பெண், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்தாள். அதினால் அவள் சிறையிலிருந்தபோது, கிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டாள். அதன் பின் அவள் வாழ்க்கை மாறியது. மற்றவர்களுக்கு உதவுபவளாக, தன் நடத்தையில் நன்கு முன்னேறியதால், அவளை தூக்குதண்டனையிலிருந்து, ஆயுட்கால சிறைக்கு மாற்றுவார்கள் என அவளோடு இருந்த அநேகர் நினைத்தனர். ஆனால், அவள் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1998-ம் ஆண்டு அவள் தூக்கிலிடப்பட்டாள்.

வேதத்தில் ஆகான் என்னும் ஒருவனும் தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டான். ‘அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்;

இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்’ – (யோசுவா 7:20,21). அவன் செய்த பாவத்தினிமித்தம் 36 இஸ்ரவேலர் எதிரிகளால் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த ஆகான் தன் பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டான், ஆனாலும் அவன் செய்த பாவத்திற்க்கு தக்க தண்டனையை அவன் அனுபவித்தான். ‘அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்’. – (யோசுவா 7:25,26).

தாவீது ராஜாவும் பாவம் செய்த போது, ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ என்று அறிக்கையிட்டார். ‘அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்; நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.

அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்’ – (2சாமுவேல் 12:13,15). அவர் தன் பாவத்தை அறிக்கையிட்டாலும், தான் செய்த பாவத்தின் விளைவை அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. ‘நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன்’ என்று தேவன் கூறினார். அதனபடியே நடந்தது.

மற்ற மதத்தை சேர்ந்தவர்கள், சொல்லும் வார்த்தை ‘நீங்கள் கிறிஸ்தவர்கள், செய்கிற பாவத்தை செய்துவிட்டு, பின் இயேசுகிறிஸ்துவிடம் போய் அறிக்கையிட்டால், அவர் மன்னித்து விடுவார். ஆகவே நீங்கள் துணிகரமாக பாவம் செய்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு வேதத்தில் உள்ள நியதிகள் தெரியாது. பாவத்தை அறிக்கையிடும்போது, நிச்சயமாக நமக்கு மன்னிப்பு உண்டு. நமக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பது உண்மைதான். ஆனால், தேவனிடம் மன்னிப்பு பெற்ற பிறகும், நாம் செய்த பாவத்திற்கு ஏற்ற தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.

நீதிமொழிகள் – 11:31 கூறுகிறது, ‘இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிகட்டப்படுமே’ என்று. கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாகிய நாம், செய்கிற பாவத்திற்கு இந்த பூமியில் சரிகட்டப்படும். ஆகவே, பாவத்தை அறிக்கையிடுகிறது நல்லது, ஆனால், அதைவிட நல்லது, பாவம் செய்யாமல் இருப்பதே! கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருப்பதால், பரிசுத்தமாய் கர்த்தரை நோக்கி முன்னேறுவோம். பாவம் செய்து அதன் பலன்களை அனுபவிப்பதை பார்க்கிலும், பாவம் செய்யாமல் இருப்பதையே தெரிந்து கொண்டு அதன்படி வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்

(சங்கீதம் 32:5)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)