இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல்

வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு முட்செடியின் கொஞ்ச நிழலில் ஒரு கருநாகம் தனது வாலின் துணையுடன் தன் வயிறு வெப்பத்தினால் பாதிக்காதபடி நின்று கொண்டிருந்தது. அதன் நிழல் சற்று கீழே விழுந்தது. அந்த நேரம் நிழலுக்காக தவித்து, திரிந்த தவளை அந்த நிழலை கண்டு சந்தோஷமாக ஓடி வந்தது. ஓரக்கண்ணால் தவளையை பார்த்த கருநாகம் அதை என்ன செய்திருக்கும்? அது நம் அனைவருக்கும் தெரிந்ததே!

வேதத்திலே உவமைகள் மூலமாக தேவன் நமக்கு அநேக காரியங்களை தெளிவுப்படுத்துவதை நாம் வாசித்திருக்கிறோம். நியாயாதிபதிகள் 9ம் அதிகாரத்திலுள்ள ஒரு உவமை இவ்வாறு கூறுகிறது, எல்லா மரங்களும் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி ஒலிவ மரத்திடம் சென்றன. ஆனால் ஒலிவ மரமோ அந்த அழைப்பை மறுத்து ‘என்னிலுள்ள கொழுமையை விட்டுவிட்டு அரசாளப் போவேனோ’ என்றது. இரண்டாவதாக அத்திமரமும், மூன்றாவதாக திராட்சை செடியும் அந்த அழைப்பை நிராகரித்தன. முடிவில் முட்செடியானது, மரங்களை பார்த்து ‘நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால் என் நிழலிலே வந்தடையுங்கள்.

இல்லாவிட்டால் என்னிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை பட்சிக்கக்கடவது’ என்றது. பாருங்கள் முட்செடிக்கு வந்த பெருமையை! முட்செடி என்பது, சாபத்தின் சின்னம். மனிதன் பாவம் செய்தபோது பூமி முள்ளையும், குருக்கையும் முளைப்பித்தது. இதன் அடையாளமாகவே இயேசுகிறிஸதுவுக்கு முட்செடி சூட்டப்பட்டதையும் நினைவிற் கொள்வோம்.

இன்றும் மனிதர்கள் நிழலைத்தேடி அலைகின்றனர். வாழ்க்கையின் நெருக்கங்களும், கசப்புகளும் அவர்களை இளைப்பாறும்படி நிழல் எங்கே உண்டு என கண்களை சுழல விடுகின்றனர். அவர்களை சிற்றின்பமும், சினிமா, குடி, போதை, ஆண், பெண்; நண்பர்களின் உறவு விபச்சாரம் போன்ற முடிசெடியின் நிழல்கள் அனைத்தும் வாவென்று அழைக்கின்றன. அந்த சிறிய நிழலுக்காக மனிதன் அதன் கீழ் ஒதுங்கி, இறுதியில் அந்த தவளையை போல் அவைகளால் விழுங்கப்பட்டு, மடிந்து போகிறான். அநேக சகோதரிகள், நிழலை தேடி அலையும்போது, சில ஆண்கள், அவர்களிடம் சற்று அன்பு காண்பித்தவுடன், உடனே அதுதான் நித்திய நிழல் என்று நினைத்து, தங்களையே அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

அதனால் தங்கள் வாழ்வை கானல் நீராக்கி, கண்ணீரோடு வாழ்கின்ற சகோதரிகள் எத்தனை பேர்! வேண்டாம், அப்படிப்பட்டதான முட்செடியின் நிழலில், தவளையைப்போல் மாட்டி கொண்டு, கருநாகங்களுக்கு இரையாக வேண்டாம்,! அதுபோன்ற முட்செடிகளின் நிழலினால் ஒருபோதும் நமக்கு மெய்யான இளைப்பாறுதல் தர முடியாது. ஆனால் அவை தரும் சற்றுநேர இன்பம் முழு எதிர்கால வாழ்வையும், இருண்டதாக்கிவிடும். மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகள், குடும்பத்தால் புறக்கணிப்பு, கண்ணீர் போன்றவையெல்லாம் முட்செடியின் நிழலை தேடி நாடி செல்பவர்களுக்கு அது கொடுக்கும் பரிசுகள்! இதை வாசிக்கும் அன்பு சகோதரிகளே, தயவு செய்து, உங்கள் வாழ்க்கை விலையேறப்பெற்றது, கர்த்தரால் கொடுக்கப்பட்டது, நீங்கள் கர்த்தர் கொடுக்கும் அன்பான வாழ்வை பெற்று, சந்தோஷமாக வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆகவே முட்செடியின் நிழலில் தயவுசெய்து தஞ்சமடையாதீர்கள்!

பிரியமானவர்களே, நாம் இளைப்பாறும்படியாக ஒரு மரத்தின் நிழல் ஆயத்தமாக உள்ளது. அதுதான் சிலுவையின் நிழல்.

சிலுவையின் நிழலிலே தேவன் நமக்கொரு மேன்மையான இளைப்பாறுதலை வைத்திருக்கின்றனர். அங்கு சாய்ந்து கொள்ள அவரது தோள்கள் உண்டு. அவர் தரும் இளைப்பாறுதல் உலகத்தாலும், உலகத்தின் பணத்தாலும், பெயராலும், புகழாலும், தர முடியாத நிரந்தரமான இளைப்பாறுதல்! அதை நாம் நாடுவோமானால், வேதனையில்லாத ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியும். முட்செடி நெருக்கி போடும் முன்பு சிலுவையின் நிழலில் வந்தடையுங்கள். அவர் உங்களை காத்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்

(சங்கீதம் 36:7)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 40 times, 1 visits today)